சென்னை எஸ்பிளனேடு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிகை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரத்தில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் முருகன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேநேரம் இந்த போஸ்டரை வைத்திருந்ததாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கறிஞர் ஆறுமுகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆறுமுகம், “முதலமைச்சர் குறித்து அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய வழக்கில் உடந்தையாக இருந்ததாக என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட உள்ளேன்.
ஏற்கனவே வழக்கொன்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்ய நான் காரணமாக இருந்ததாலும், சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் சேகர்பாபுவுக்கு என் மீது முன் விரோதம் இருந்து வருகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கடந்த 30 ஆம் தேதி நான் கோயிலுக்குச் சென்றபோது, துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் தலைமையிலான குண்டர்களை என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்த அனுப்பினார்.
இதனால் பயந்து அர்ச்சகரின் வீட்டில் நான் ஒளிந்து கொண்டேன். அப்போது அங்கு வந்த ராயபுரம் உதவி ஆணையர் லட்சுமணன், என்னை பத்திரமாக காப்பாற்றி வீட்டிற்கு அனுப்பினார். இதனால் எந்த நேரத்திலும் அமைச்சர் சேகர்பாபுவால் எனது உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதால், காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் குறித்து அவதூறு போஸ்டர் ஒட்டிய பாஜக நிர்வாகிகளை கைது செய்ய தடை