சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை - பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை, முறையாக அமல்படுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
விவசாயிகள் பாதிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (பிப்.24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈரோட்டைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரவு நேர வாகனப் போக்குவரத்துத் தடை காரணமாக, தாளவாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கொண்டுசெல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மாவட்ட ஆட்சியருக்கு இந்த தடை உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ அவசரத்துக்கு விலக்கு
மேலும் மருத்துவ அவசரத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தாக்கல் செய்த வழக்கும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர்கள் சில புகைப்படங்களை தாக்கல் செய்தார். அவற்றை பார்த்த நீதிபதிகள், சாலையின் தொடக்கத்திலேயே 16 டன் எடைக்கு மேல் சுமை கொண்டு செல்லக்கூடாது என்று விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும், அதை மீறி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது எப்படி என்று கேள்வி எழுப்பினர்.
எடைமேடை செயல்படுகிறதா?
மேலும் 27 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையின் அருகில் உள்ள நிலங்கள் விவசாயம் தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினர். அந்தப் பகுதியில் உள்ள எடைமேடை செயல்படுகிறதா? இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மருத்துவ அவசர வாகனங்கள் இந்த சாலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை கண்காணிக்க உடனடியாக சாலையின் தொடக்கத்திலும் முடிவிலும் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும், அதிக எடை ஏற்றிச்செல்லும் லாரிகள் சாலையைக் கடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
மேலும் இந்த 27 கிலோ மீட்டர் தூரத்தில், ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (பிப்ரவரி 28) தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: காவலர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் தொடர்ந்து பயணம்: கடுப்பான தெற்கு ரயில்வே நிர்வாகம்