சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று கடந்த பிப்ரவரி மாதம் வேகமாக குறைந்து ஒற்றை இலக்கத்தில் பதிவானது. ஆனால், மார்ச் மாதம் அதன் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைப் பலனின்றி இறப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அதற்கு காரணமாக நோயல் பாதிக்கப்பட்டவருக்கு இணை நோய்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் ஏப்ரல் 15ஆம் தேதி 502 பேருக்குப் புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3048 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கான பரிசோதனையை அதிகரித்து இருப்பதால், பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
ஒமைக்ரான் உருமாற்றமான XBB, BA2 வகை தொற்று அதிகமாகப் பரவி வருவதால், மக்கள் அதிகம் கூடும் திரையரங்கம், பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் சிறுவர் பூங்கா, உணவு விடுதிகள், கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி, 'கேரளா, மாகராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் அனைவரும் கரோனா நோய் தொற்றால் பாதிப்பு அடையாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள, பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வப்போது கைகளை சுத்தமாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.
காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, உடம்பு வலி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். கரோனா பரிசோதனை செய்து தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குணமடையும் வரையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் ஏற்கனவே பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தாலும் பாதிப்பு குறைவாக இருந்தால், கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் மீண்டும் தொற்று அதிகரித்து வருவால் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஓரிரு நாட்களில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு; அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்