சென்னை: மே மாதம் 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது என அரசுத் தேர்வுத்துறை, ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் சுகாதாரத்துறையின் சார்பில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், 12ஆம் வகுப்பு தேர்வினை ஒத்திவைக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சுகாதாரத்துறையின் அறிவுரையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே மாதம் 3ஆம் தேதிக்குப் பதில், ஜூன் மாதம் நடத்தலாம் எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இது குறித்து முறையான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.