சென்னை: செங்கல்பட்டு மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் 604 தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டுவருகின்றன. அதில் நான்காயிரத்து 500 மருத்துவர், செவிலியர், அலுவலர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்பட்ட தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட சில இடங்களில் அரசுப் பள்ளி, மாநகராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை தலைமைச் செயலர் வெ. இறையன்பு ஆய்வுசெய்தார்.
மேலும் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து கேட்டறிந்தார். அதனையடுத்து, பல்லாவரம் நகராட்சியில் உள்ள நெமிலிச்சேரி ஏரியில் படர்ந்திருந்த ஆகாய தாமரை அகற்றும் பணி, ஏரியினை ஆழப்படுத்தி கரையைப் பலம்படுத்தும் பணியினைப் பார்வையிட்டார்.
அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க குழு அமைத்தது அரசு