சென்னை: விருகம்பாக்கம் வடபழனி ஆகிய இரண்டு இடங்களில் பிராவிடன்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் சிவசக்திவேல். இவர், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா(Ghana) நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும் அதன் மூலம் குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதால் கிடைக்கும் லாபத்தில். முதலீட்டாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக வாக்குறுதி அள்ளி வீசி உள்ளார்.
இது தவிர முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு நிலமாக பத்திரப்பதிவு செய்து அதற்கும் வட்டி தருவதாக மற்றொரு திட்டம் இருப்பதாகவும், மேலும் வழக்கமான எம்எல்எம் பாணியில் சில டுபாக்கூர் அழகு சாதன பொருட்களையும் சத்து பானங்கள் எனக் கூறி விற்பனை செய்து தரக் கூறியும் முதலீடுகளை ஈர்த்துள்ளனர்.
முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காக சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் கூட்டங்களை நடத்தி லட்சக்கணக்காக முதலீடு செய்த 20 பேரை மாதம் தோறும் துபாய் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், அவ்வாறு இன்ப சுற்றுலா சென்ற 20 பேரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை முதலீடு செய்பவரிடம் போட்டு காண்பித்து நம்ப வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேல் துபாயில் இதே நிறுவனத்திற்கு சொந்த அலுவலகம் இருப்பதாகவும், துபாய் இன்பச் சுற்றுலாவின் போது அந்த அலுவலகத்தையும் நேரில் காண்பிப்பதாகவும் கூறி புகைப்படங்கள் வீடியோக்களை காண்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் தற்காலிக அலுவலகங்கள் அமைத்து டீம் லீடர்கள் என்கிற போர்வையில் அந்தந்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளது. இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு முதல் இரண்டு மாதம் மட்டும் வட்டி பணத்தை கொடுத்து விட்டு, கடந்த எட்டு மாதங்களாக அசல் வட்டி என இரண்டு தொகையையும் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல்வேறு நிதி நிறுவனங்களின் மோசடி தொடர்பாக தினமும் ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து நிறுவனத்தை நடத்தி வரும் சிவசக்திவேல் இடம் முதலீட்டாளர்கள் கேட்ட பொழுதும் மிகவும் நம்பிக்கையாக தனக்கு வெளிநாடுகளில் இருந்து வர வேண்டிய பணம் வரவில்லை எனவும், வங்கி பிரச்சினை உள்ளதாகவும் பல்வேறு காரணங்களை கூறி எட்டு மாதங்களை கடத்தியுள்ளார். மேலும் எப்போது அழைத்தாலும் வீடியோ காலில் பேசி முதலீட்டாளர்கள் அனைவரையும் தொடர்ந்து நம்ப வைத்துள்ளார் சிவசக்திவேல்.
ஆனால் அண்மைக்காலமாக வீடியோ காலும் பேசாமல் முதலீடு செய்தவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அலுவலகத்திலும் ஆளில்லாததால், சிவசக்திவேல் துபாயில் தலைமறைவாகி இருக்கலாம் எனவும் தாங்கள் டீம் லீடர்களாக இருந்து பணம் பெற்ற யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாலும், சுமார் 2000 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து தற்போது ஏமாற்றம் அடைந்த நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.
தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு செல்போன் தவழும் இந்த காலத்திலும் தினசரி இது போன்ற போலி வாக்குறுதிகளை கொடுத்து மோசடி செய்யும் நிறுவனங்கள் தொடர்பாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தாலும் கூட உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசையில் பொதுமக்கள் மோசடிக்கு ஆளாவது தொடர்கதையாகவே உள்ளது.
இதையும் படிங்க: நிதிநிறுவன மோசடிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் அட்வைஸ்