சென்னை: உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுக்கோ மீட்டர் கருவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’’1991-ஆம் ஆண்டு முதல் உலக நீரிழிவு நோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக நீரிழிவு நோய் தினமானது இன்சுலினை கண்டுபிடித்த ஃபிரட்ரிக் பான்டிங் பிறந்த நாளான இன்று கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் 6 முதல் 8 விழுக்காட்டினரும், இந்திய அளவில் 10 முதல் 12 விழுக்காட்டினரும், தமிழகத்தை பொருத்தவரையில் 13 விழுகாட்டினரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் இதுவரை 72 விழுக்காட்டினரை பரிசோதித்துள்ளோம்.
சென்னையை பொருத்தவரையில் 40 சதவிகிதம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். இதன் மூலம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட 96,17,132 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதில் நீரிழிவு நோயால் மட்டும் 26,40,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14 லட்சத்து 37 ஆயிரத்து 96 பேர் இலவச இன்சுலின் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இதற்காக ஆண்டொன்றிற்கு தமிழ்நாடு அரசு 7 கோடியே 18 லட்சத்து 54 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
கடந்த ஓராண்டிற்கு முன்னதாகவே எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பாட புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணிகள் துவங்கி விட்டது. அதில் இயன் முறை மருத்துவம், நோய் தீர்க்கும் உணவு மருத்துவம், காயவியல், மருத்துவ தொழில் நுட்ப வியல், குழந்தைகள் நல மருத்துவம், மயக்க இயல் புத்தகங்கள் என 7 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 7 புத்தகங்கள் உட்பட 14 புத்தகங்களும் மொழி பெயர்க்கும் பணிகள் டிசம்பரில் நிறைவடைந்துவிடும். புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்ட உடன் தமிழ்மொழி வழியில் மருத்துவ படிப்புகள் தொடங்கப்படும். அப்போது தேர்வினை எந்த மொழியில் எழுத வேண்டும் என்பது அறிவிக்கப்படும்.
வியாசர்பாடியை சேர்ந்த பிரியா என்ற மாணவிக்கு கால் மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யபட்டது. பெரியார் அரசு மருத்துவமனையில் சுருக்கு கட்டு போடப்பட்டதால், ரத்த ஓட்டம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்து எனும் நிலை ஏற்பட்டதாகவும் ஆயினும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சிகிச்சையால்,பிரியா தற்போது காப்பாற்றபட்டுள்ளார்.
இழந்த காலுக்கு பதிலாக தமிழக அரசு, அதிநவீன செயற்கை கால் பிரியாவுக்கு பொருத்த உள்ளோம். காலை இழந்த மாணவி பிரியா படித்து முடித்ததும் அரசு வேலை வாய்ப்பு குறித்து பரிசீலிக்கப்படும். மருத்துவர்கள் கவன குறைவு உண்மை என்பதும், கால் இழப்புக்கு காரணமான இரண்டு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்திருப்பதுடன் துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் தவறுகள் 100 சதவீதம் நடைபெறவில்லை என கூறவில்லை. ஒரு சில தவறுகள் நடைபெறுகிறது. தற்பொழுது அரசு மருத்துவமனைகளுக்கு அதிகளவில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.
மருத்துவர்களை போராட வேண்டாம் என கூறவில்லை. சட்டப்போராட்டக்குழு என்ற பெயரில் பெருமாள்பிள்ளை உள்ளிட்ட 20 மருத்துவர்கள் மட்டுமே பேராட்டம் என நடத்துகின்றனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுவதை அரசு வரவேற்கிறது. நானும் தொழிற்சங்கத்தில் நிர்வாகியாக இருந்தப் போது எம்ஜிஆரை எதிர்த்து கோட்டையில் போராட்டம் நடத்தி, அவரை கீழே வந்து பேச வைத்துள்ளேன். உண்மையான கோரிக்கைக்காக போராடலாம்.
தனியார் மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் மூலம் கட்டணம் செலுத்தும் முறை துவக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்!