சென்னை: மலேசியா நாட்டில் ஈப்போ நகரில் 18ஆவது சர்வதேச கராத்தே போட்டி கடந்த மே மாதம் 27ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டிலிருந்து ஆல் இந்தியா கராத்தே டோ கோஜு ரியு அசோசியேசன் சார்பில் 12 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 21 பிரிவுகளில் விளையாடி 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இன்று (ஜூன் 1) சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர், உறவினர்கள் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அரசு உதவ வேண்டும்: இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில், "போட்டிகள் மிக கடுமையாக இருந்தது ஆனாலும் மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். தமிழக அரசு உதவி செய்தால் அடுத்து வரும் காமன்வெல்த் ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வார்கள். சிலம்பம் கலைக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்தது போல் கராத்தே கலைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவோம்" என்றார்.
பதக்கங்களை வென்ற மாணவர்கள் கூறியதாவது, "எங்களில் நிறைய பேர் அரசு பள்ளிகளில் தான் படித்து வருகிறோம். கடினமாக உழைத்து கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரசு உதவி செய்தால் நிச்சயம் காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வோம். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த காலத்தில் கண்டிப்பாக அவர்கள் கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்" என்றனர்.
40 வயது பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீதா கூறுகையில், "நான் வேலைக்கு சென்று கொண்டே கராத்தே பயிற்சி எடுத்தேன். கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. கராத்தே பயிற்சியை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மக்கள் நம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்... அலுவலர்கள் அதனைப்பூர்த்தி செய்ய வேண்டும்' - முதலமைச்சர் ஸ்டாலின்!