சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களாக 2009 மே மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கும், 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது. அடிப்படை ஊதியத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என இடைநிலை பதிவு அமைப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டபொழுது அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் நேரடியாக களத்திற்குச் சென்று, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊதிய முரண்பாடு களையப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 311 மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான இருபதாயிரம் ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில், சென்னை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக வளாகத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியைகளும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு போதுமான கழிப்பறை வசதிகள் இன்றியும் சிரமத்தை அனுபவித்தனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும் பொழுது, 'இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் எங்களது கோரிக்கையினை பலமுறை முயன்றும்; ஒற்றை கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையினை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர் அறிவிக்கும் வரை தீவிரப்போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்’ எனத் தெரிவித்தார்.
திமுக ஆட்சி அமைந்தபோது கரோனா தொற்று இருந்ததால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தாமல் அமைதியாக இருந்தனர். தற்பொழுது கரோனா தொற்று முடிவடைந்து திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் தங்களின் கோரிக்கைக்காக போராட்டக் களத்தில் குதித்துள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:TNPSC: குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2450 பணியிடங்கள்.. ஜனவரியில் தேர்வு முடிவு!