திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் பாரதி நகரில், 53 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவி கருமாரி அம்மன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, பிரமோத், சிவப்பிரசாத் ஆகியோரால் அறக்கட்டளை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஏழை மற்றும் மீனவ குடும்பங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி திறக்கப்படாமல் இருந்த நிலையில், பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சந்திரசேகர், அப்துல் ரசாக், சுரேகா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், "பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் பெறாமலும், மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமலும் பள்ளி மூடப்பட்டு, இடிக்கப்படுவது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(ஜன.9) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் பெற்றோர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் டி.பிரசன்னா, 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால், பள்ளி கட்டடத்தை இடிப்பதற்கும், இடத்தை விற்பதற்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையேற்று, பள்ளி கட்டடத்தை இடிக்கவும், இடத்தை விற்பனை செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர், பள்ளியின் நிர்வாகிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.