சென்னையில் உள்ள கல்லூரிகளின் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் கடந்த மார்ச் 24ஆம் தேதிமுதல் மூடப்பட்டன. எட்டு மாதங்களுக்குப் பின்னர் டிசம்பர் 7ஆம் தேதிமுதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
ஐஐடி, அண்ணா பல்கலைகழகத்தில் கரோனா
இதனால், மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை ஐஐடியில் தங்கியிருந்த மாணவர்கள், பணியாளர்கள் என 194 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் ஆறு மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கரோனா பரிசோதனை தீவிரம்
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அனைத்து கல்லூரி விடுதிகளிலும் தங்கி உள்ள மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அதேபோல் கல்லூரிகளிலும் மாநகராட்சி சுகாதாரத் துறையினர் நேரில் சென்று பரிசோதனை செய்கின்றனர். கல்லூரி விடுதிகளில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகின்றன என மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை!