சென்னை: கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டின் அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது. அப்போது அரசின் துரித நடவடிக்கை, கண்காணிப்பு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சல் நோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மாவட்டங்களில் உள்ள எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகள், கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழையாதபடி திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் நுழையும் மற்ற அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: உச்சகட்டத்தில் பரவும் கரோனா: தமிழ்நாட்டில் நிலை என்ன?