தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய பிரிவான உளவுத்துறையில் நீண்ட காலமாக காவல்துறை தலைவராக பணியாற்றி வருபவர் சத்தியமூர்த்தி. அவர் 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.
அதனால் அவரை தேர்தல் ஆணையர் உளவுத்துறை பிரிவிலிருந்து பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அதையடுத்து அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன் உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னைகளின் போது சத்தியமூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அதனால் கூடுதலாக உளவுத்துறை பொறுப்பை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி கவனித்து வந்தார்.
அதன்பின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றவுடன், சத்தியமூர்த்தியை மீண்டும் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமித்தார். அவ்வாறு நீண்ட ஆண்டுகளாக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்து வந்த சத்தியமூர்த்தி நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ளார். அதனால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சமூக நீதித்துறையில் டிஜிபி லட்சுமி பிரசாத், காவலர் நலன் ஏடிஜிபி சேஷசாயி, தொழிற்நுட்ப பிரிவு ஏடிஜிபி மாகாளி ஆகியோரும் மே 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆயுதப்படை காவலர்களுக்கு முகக் கவசம், உணவுப் பொருட்கள் வழங்கிய சிறப்பு ஐஜி