சென்னை அருகே மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் மேக்அப் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வசீகரிக்கும் வகையில் விதவிதமான உடைகளில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்த மேடை நாடக கலைஞர் ராகுல் சிராஜ் என்பவரோடு இளம்பெண்ணுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.
பின்னர் தான் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பதாலும், சிராஜ் நாடக கலைஞர் என்பதாலும் தொழில் ரீதியாக தொடங்கிய இன்ஸ்டா அறிமுகம், நட்பாக மாறி, நேரில் சந்திக்கும் அளவிற்குச்சென்றுள்ளது.
ஒரு நாள் சிராஜை நேரில் சந்தித்தபோது தான் தங்கி வரும் அதே மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்ததால், நெருக்கம் அதிகமாகியது. பின்பு இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில் தனது காதலை சிராஜ் அந்த இளம்பெண்ணிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிராஜ் நம்பவைத்ததோடு, இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் எனவும்; தனக்குத் தெரிந்த நபர்கள் மூலமாக சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் மேக்கப் ஆர்டர்களை எடுக்கலாம் எனவும் சிராஜ் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிராஜ் தொழில் தொடங்குவதற்காக சிறுக சிறுக ரூ.10 லட்சம் பணம், கார் என அந்த பெண்ணிடம் பெற்றதாகவும், அவுட்டிங் போகலாம் எனக்கூறி துரைப்பாக்கம் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும், அதேபோல பல இடங்களில் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது.
அதிகளவில் இளம்பெண் பணம் செலவு செய்ததால் சந்தேகமடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இது குறித்து கேள்வி எழுப்பும்போது காதலனுக்காக செலவு செய்வதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். முதலில் பெற்றோர் எதிர்ப்புத்தெரிவித்த நிலையில், பின்னர் ஒத்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிராஜ் இளம்பெண்ணுடன் உரையாடுவதைத் தவிர்த்து வந்த நிலையில், பின்னர் திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் இளம்பெண், பல முறை சிராஜிடம் கேட்டபோதும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் எனத் தவிர்த்து வந்துள்ளார்.
பணம் மற்றும் உல்லாசத்திற்கு மட்டுமே தன்னைப்பயன்படுத்திக்கொண்டதை அறிந்த இளம்பெண் ஆத்திரமடைந்து காதலன் சிராஜ் மீது கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சிராஜை நேற்று நாகர்கோவிலில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிராஜ் மீது பலாத்காரம், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பட்டாசு கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் கேட்ட ரவுடிகள் கைது