நேற்று முன்தினம் சென்னை காசிமேட்டில் ரவுடி திவாகரன் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ரவுடி திவாகரனை கொலை செய்ததாக லோகேஷ், விமல் உட்பட 6 பேர் சரணடைந்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் உளவுத்துறை போலீசார், காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியனை எச்சரித்தும் இந்தக் கொலையை தடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கொலை நடப்பதற்கு முன் தினம் ரவுடி லோகேஷ் மற்றும் ரவுடி திவாகரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. லோகேஷின் நண்பர் விமலை தகராறு காரணமாக ரவுடி திவாகரன் முட்டி போட வைத்துள்ளார்.
இதனால் ஏற்கனவே இரு ரவுடி கும்பல்களுக்கு நடுவே ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், கொலை நடப்பதற்கு முன்னதாக ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும், இந்த கும்பல்களிடையே மோதல் ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்திருந்தது.
காசிமேடு காவல் ஆய்வாளர் இசக்கி பாண்டியன் முறையான நடவடிக்கை எடுக்காததால்தான், ரவுடி திவாகரனை பொது இடத்தில் வைத்து லோகேஷ் கும்பல் வெட்டிக் கொன்றது துறை ரீதியான விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நடவடிக்கை எடுக்கத் தவறிய காசிமேடு ஆய்வாளர் இசக்கி பாண்டியனை ஆயுதப்படைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.