பாமகவிலிருந்து பிரிந்து புதிதாக 'அனைத்து மக்கள் அரசியல் கட்சி' என்கிற கட்சியை தொடங்கியுள்ள ராஜேஸ்வரி பிரியா தனது கட்சியினருடன் பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.
அப்போது, அங்கு வந்த திருவல்லிக்கேணி காவல்நிலைய ஆய்வாளர் சீத்தாராமன், அங்கு கூடியிருந்த பெண்கள் மத்தியில் காவலன் செயலி எவ்வாறு பெண்களுக்கு பயன்படுகிறது, அதன்மூலம் பெண்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அவர், "பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது இனி பயப்படத் தேவையில்லை, காவலன் செயலி தங்களது செல்ஃபோனில் தரவிறக்கம் செய்திருந்தால் இருந்தால் போதுமானது, இதனை பயன்படுத்த சில விநாடிகள் போதும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கே காவல் துறையினர் உதவிக்கு வந்துவிடுவார்கள்.
இதேபோல், வெளியூர்களிலிருந்து தனியாகவரும் பெண்கள் போக்குவரத்துக்கு வாகனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றால் காவலன் செயலி மூலம் காவல் துறையினரை வரவழைத்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியும்" என்றார்.
மேலும் செல்ஃபோனில் காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் செயல்முறை விளக்கம் அளித்தார். ஒரு அரசியல் கட்சியின் ஆர்ப்பாட்ட மேடையில் காவல் துறை ஆய்வாளர் காவலன் செயலி குறித்து விளக்கமளித்ததை அங்கிருந்த பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: