சென்னை: டெல்லியில் உள்ள ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீது ஏபிவிபியை சார்ந்த மாணவர்கள் தாக்கி உள்ளனர்.
இது குறித்த டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவரும், இட ஒதுக்கீடு கிளப் மாணவருமான நாசர் கூறும்போது, ''டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி என்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவ அமைப்பினர், மற்ற மாணவர்களை தரம் தாழ்ந்து பேசுதல், தகாத வார்த்தைகளை பேசுவது, மாணவர்கள் அமைப்பு அலுவலகங்களில் வெறுப்பு பிரசாரத்தை செய்யும் வகையில் எழுதி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (19ஆம் தேதி) 100 மலர்கள் அமைப்பு என்ற அமைப்பு, படம் போடுவதற்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஏபிவிபி அமைப்பினர் வெளியே செல்ல மாட்டோம் எனக் கூறியதுடன், படம் போடுவதற்கு ஏற்பாடு செய்த 2 பேரை ஏபிவிபி அமைப்பினர் அடித்துள்ளனர். அதனை அறிந்து சென்ற பிற அமைப்பு மாணவர்களுடன் நானும் சென்றேன்.
அப்போது அங்கு பார்த்தால், அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் படம், மார்க்ஸ், லெனின் படம் போன்றவற்றை சேதப்படுத்தி இருந்தனர். இதுகுறித்து கேட்டபோது பதில் அளிக்காமல், 'பாரத் மாதாகி ஜே' என கோஷம் போட்டபடி வெளியே சென்றனர். அதனைத்தொடர்ந்து ’100 மலர்கள்’ அமைப்பு மாணவர்கள் படத்தை போட ஆரம்பித்தனர். அடுத்த 10 நிமிடங்களில் ஏபிவிபி மாணவர்கள் உள்ளே புகுந்த மாணவர்களை தாக்கத் துவங்கினர்.
அப்போது பெரியார் படத்தை ஏன் உடைத்தீர்கள் என நான் கேட்டதற்கு, அவர்கள் என்னை அடித்தார்கள். அதனால் தலையில் ரத்தம் வந்தது. தலையில் ரத்தம் வருவதால் ஆம்புலன்சினை வர வைத்துச் செல்லும்போதும் ஆம்புலன்ஸிற்கு வழி விடாமல் எங்களை உள்ளே வைத்து அடித்தும், கண்ணாடியையும் உடைத்தனர். அவர்களிடமிருந்து 3 தமிழ் மாணவர்கள் தப்பித்து தான் வந்தோம்.
ஏற்கனவே, குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியானபோது தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல் எறிந்தனர். அப்போதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அந்த தாக்குதலை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைவேந்தரிடம் கூறினாம். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜவர்கலால் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி என்ற குண்டர் அமைப்பினை வளர்த்து விட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதி வழங்குகிறது. இது போன்ற பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் மாணவர்கள் எப்படி படிக்க இங்கு வர முடியும்'' என கேள்வி எழுப்பினார். ''ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுவற்றில் வெறுப்பை தூண்டும் வகையில் பல்வேறு வாசகங்களை ஏபிவிபி அமைப்பினர் எழுதியுள்ளனர்'' எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சளி மருந்துகளை பயன்படுத்தினால் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தலாம் - சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்