சென்னை: அரசு வேளாண் கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்தும் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian council for agriculture research - ICAR) மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் உள்ள 15 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நடத்துகிறது. இந்தியா முழுவதும் 4 தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள், 64 மாநில பல்கலைக்கழகங்களின் கீழ் 100க்கும் மேற்பட்ட வேளாண் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லூரிகளில் 15 சதவீதம் இடங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு சேர தேசிய தேர்வு முகமை சார்பில் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மூன்று நாட்களாக விண்ணப்பித்த நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 2021ஆம் ஆண்டில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஐ.சி.ஏ.ஆர் பொது கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க 10ஆம் மதிப்பெண் கட்டாயம் என இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ளதால், தமிழக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதை பூர்த்தி செய்தால் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ (JEE) தேர்வுக்கு 10ஆம் மதிப்பெண் கட்டாயம் என கேட்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் இல்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதுபோல, தற்போது ஐ.சி.ஏ.ஆர் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கல்வி ஆலோகர் அஸ்வின் கூறும்போது, “இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நடத்தப்படும் தேர்வுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால் தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கரோனா காலத்தில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மாணவர்கள் மதிப்பெண் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6 முதல் 9 வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு திறனறிவுத் தேர்வு! பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு என்ன?