சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23-ஆம் தேதி வாக்கில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
மேலும், இன்னும் இரண்டு தினங்களில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய கடலோர காவல் படை மற்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“மத்திய வங்க கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
மேலும் காற்றும் பலமாக வீசி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் நிலையில், இது புயலாக மாறும் அபாயமும் உள்ளது. எனவே ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரைக்கு திரும்புமாறும், அடுத்த சில நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் கடலோர காவல் படை எச்சரித்துள்ளது.
கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ராணி அபாக்கா மூலம், வெள்ளிக்கிழமை வங்கக்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம், ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து விளக்கமாக எச்சரிக்கை செய்து, உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டனர்” என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:
வங்கக் கடல் பகுதிகள்: அக் 21-ஆம் தேதி மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக் 22-ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக் 23-ஆம் தேதி மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அக் 24-ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரூரில் புதிய ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு.. எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன?