இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்து 74ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆண்டுதோறும் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அதேபோல இந்த வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஏற்ற உள்ளார்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 8, 10 ஆகிய தேதிகளில் ஒத்திகை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று (ஆகஸ்ட் 13) ஒத்திகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை, பெண்கள் கமாண்டோ பிரிவு, குதிரைப் படை, வாத்திய கருவிகள் இசைக் குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றன.
இதையடுத்து, 16 இருசக்கர வாகனத்தில் காவலர்கள் முதலமைச்சர் வாகனத்தை படை சூழ தலைமைச் செயலகம் வரை விட்டுச் செல்வது போல ஒத்திகை பார்க்கப்பட்டது. பின்னர், முப்படை வீரர்கள் அணிவகுப்பை முதலமைச்சர் பார்வையிடுவார். அடுத்ததாக, கோட்டையில் முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்.
பின்னர், சுதந்திர தின நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார். இந்த சுதந்திர தின விழாவில், பள்ளி மாணவர்கள், தியாகிகள், பொதுமக்கள் பங்கு பெற முடியாது என்று அரசு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமைச் செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் சார்பாக சமூக நலத் துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, தகுந்த இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நாகர்கோவில்; சுதந்திர தின விழா ஒத்திகை!