இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டின் 74ஆவது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே அலுவலர்கள் சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக வளாகத்தில், இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். கரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சரின் சார்பாக சமூக நலத் துறை அமைச்சர் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, தகுந்த இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோலாகலத்துடன் சுதந்திர தின விழாவுக்குத் தயாராகும் புதுச்சேரி!