சென்னை: மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 10) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலில், மாநாட்டிற்கு வருகை புரிந்தோரை தலைமைச் செயலாளர் இறையன்பு, வரவேற்றுப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமை உரை:
ஊரடங்கைச் செயல்படுத்துவது; மக்களின் வாழ்வாதரமும் அடிப்படைத் தேவைகளும் பாதிக்காத வகையிலே, அரசு எடுத்த நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவது எனும் ‘மாபெரும் மக்கள் இயக்கம்’ வெற்றிகாணக்கூடிய அளவிலே உழைத்தது நீங்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறபோது, நீங்கள் அளித்த உழைப்பு மெச்சத்தக்கது - பாராட்டுக்குரியது.
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்
‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்று ஏழு தொலைநோக்குக் குறிக்கோள்களை அறிவித்தோம். அவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுத்து நிறைவேற்றி வருகிறோம். இந்த ‘திராவிட மாடல்’ அரசின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு நிர்வாகச் சக்கரத்தைச் சரியான திசையில், மக்கள் பயனடைக்கூடிய திசையிலே திருப்பினோம்.
தற்போது தமிழ்நாட்டில் 24 விழுக்காடாக இருக்கும் மொத்த பசுமைப் பரப்பினை குறைந்தபட்சம் 33 விழுக்காடாக 10 ஆண்டுக்குள் உயர்த்திட வேண்டும். இந்த இலக்கை அடைய ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒரே திசையில் பயணிக்க வேண்டும்.
புதிய முதலீடுகள் வருவதற்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பதற்கும், அதன் வழியாக நாம் விரும்பும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் இலக்கினை அடைந்து மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதிசெய்யவும் சட்டம் ஒழுங்கு மிக மிக முக்கியமாகும்!.
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய சமூகவிரோத சக்திகளை கூலிப்படைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தமிழ்நாடும் ‘நம்பர்1’ என்ற நிலையை அடையும். எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பி நான் ஒப்படைக்கிறேன். நாள்தோறும் என்னுடைய கவனத்துக்கு வந்த பல விஷயங்கள் குறித்து நான் பேச விரும்பினாலும் மாநாட்டின் முதல் நாளான இன்று உங்கள் கருத்துகளை முழுமையாக நான் கேட்க விரும்புகிறேன். மாவட்ட அளவில் உள்ள உண்மையான நிலவரங்களை அறிந்துகொள்ள நான் காத்திருக்கிறேன். ஆகவே, உங்களுடைய கருத்துக்களைத் தெளிவாக நீங்கள் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: என் ஆட்சியில் யார் தவறு செய்தாலும் தண்டனை தான் - முதலமைச்சர் ஸ்டாலின்