சென்னை: தியாகராய நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர விடுதி, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி, மற்றும் எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் இன்று காலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை பாலாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி லட்சுமி நாராயண மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தாம்பரம் அடுத்த சேலையூர் பாரத் தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம், பாலாஜி பிசியோதெரபி கல்லூரி, பாலாஜி நர்சிங் கல்லூரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நடத்தி வருகிறார். இந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அதற்குத் தொடர்புடைய அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
தியாகராய நகர் திலக் தெருவில் மதுபான ஆலை தொடர்பான அலுவலகம், திருமூர்த்தி தெருவில் உள்ள ஜெகத்ரட்சகன் அலுவலகம், அதேபோல் குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனை, மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை வருமான வரித்துறை நடைபெற்று வருகிறது.
அதே போல் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, குரோம்பேட்டை பகுதியில் உள்ள வீடு, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் பூந்தமல்லி அருகே உள்ள சவிதா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் சோதனை நடைபெற்ற வருகிறது.
சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஜெருசேலம் மற்றும் தாகூர் கல்வி நிறுவனங்களுக்குத் தொடர்புடைய தலைமை நிர்வாக அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!