தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான மெட்டல் நிறுவனம், ஜெயின் மெட்டல் குழுமமாகும். அந்நிறுவனம், சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி, மாதவரம் ஆகிய இடங்களில் ஆலைகள் அமைத்து காப்பர் சுருள், மெட்டல் இறக்குமதி ஆகியவற்றைச் செய்துவருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நிர்வாக அலுவலகங்கள், ஆலைகள் என 30 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமானத் துறை அலுவலர்கள் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.
ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகமானதிலிருந்து போலி நிறுவனங்களை உருவாக்கி வெளிநாடுகளிலிருந்து இரும்பு, எஃகு, தாமிரம் உள்ளிட்டவைகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் ஜெயின் மெட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் 250-க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்தச் சோதனை இரண்டு நாள்கள் நடைபெறும் என வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனம் காப்பர் மெட்டல் தயாரிப்பு, இறக்குமதி தொழில் மட்டுமல்லாமல் மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) தொழிலிலும் ஈடுபட்டுவருவதும் கவனிக்கத்தக்கது. முன்னதாக, இதுபோல சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை செய்துவருவதாக பல மெட்டல் நிறுவனங்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க : சிலிண்டர் விலை உயர்வு: சிலிண்டருக்கு மாலை, நாமம் போட்டு நூதனப் போராட்டம்