சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், அடையாறு இல்லத்தில் ஒரு அறையிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளதால் பணத்தை எண்ணுவதற்கான இயந்திரம் கொண்டு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: வருமானவரித்துறை சோதனை: ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவன சொகுசு காரிலிருந்து ஆவணங்கள் பறிமுதல்!
அதேபோல் வீட்டின் ஒவ்வொரு பகுதியாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவரின் வீட்டின் அருகே உள்ள கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலகம், கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பள்ளியின் நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியிலும் ஒவ்வொரு அறையிலும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
ஜெகத்ரட்சகன் வசித்து வரும் வீடு பழமையான வீடு என்பதால் அதனைச் சுற்றி அவ்வப்போது பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வந்துள்ளன. அந்த இடங்களுக்குப் பெண் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாரத் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!
அந்த இடங்களில் புதிதாக ஏதாவது ரகசிய அறைகள் வைக்கப்பட்டுள்ளதா? எனச் சுவரைத் தட்டிப் பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வீட்டின் ஜன்னல் கதவு அதற்குப் பின்னால் எதாவது அறை இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெகத்ரட்சகன் இல்லத்தில் 1.2 கோடி பணமும், சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் கணக்கில் வராத ரூபாய் 10 கோடி கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன. மேலும், ஏராளமான சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்த சோதனையானது நாளையும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படிங்க: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!