சென்னை: சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனம் முதன்மையாக கலாமந்திர், காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் மற்றும் கேஎல்எம் ஃபேஷன் மால் என்ற பிராண்ட் பெயர்களில் பிரத்யேக புடவை விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில் இந்நிறுவனத்தின் கடைகள் உள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்டப் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர், பாண்டி பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்டப் பகுதியில் காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி பட்டுப் புடவைக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் காஞ்சிபுரம், சென்னை மயிலாப்பூர், அண்ணா நகர், தியாகராஜர் பகுதிகளில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் பாண்டி பஜார் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி பட்டுப்புடவை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பட்டுப்புடவைகள் மற்றும் துணிகள் விற்பனை செய்ததில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக இந்நிறுவனத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை முதல் பாண்டிபஜார் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி பட்டுப்புடவை கடையில் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரி குழு சோதனை மேற்கொண்டு வருகிறது. மேலும் அங்கு 10-ற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிறுவனத்தின் மற்ற கிளைகளிலும் அதிகாரிகள் சோதனை செய்துவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
சென்னையைப் போலவே காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டுச் சேலை உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவனத்தில், இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில், சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து ஏழு அதிகாரிகள், மூன்று காவலர்கள் உட்பட சுமார் பத்து பேர் இரண்டு கார்களில் வந்திறங்கி சோதனை செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் சாய் சில்க் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் அங்கம்தான் இந்த ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவனம். இதன் உரிமையாளரான கோபிநாத், மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவனத்தில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையால், காந்தி சாலையில் உள்ள மற்ற பட்டுச் சேலை உற்பத்தி நிறுவனங்களில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.