தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர், காணொலி பதிவு செய்பவர், இரண்டு காவலர்கள் அடங்கிய 48 பறக்கும் படையினர், 48 நிலையான கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது (16.03.2021) முதல் மேலும் 96 பறக்கும்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் கடந்த 16ஆம் தேதி நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11 கிலோ 786 கிராம் 106 மி.கிராம் தங்கமும், 46 கிலோ 560 கிராம் 72 மி.கிராம் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி மாம்பலம் கிண்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகார், வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 84 லட்சத்து 14 ஆயிரத்து 203 ரூபாய் பணம், 24 கிலோ 537 கிராம் 326 மி.கிராம் தங்கம், 80 கிலோ 716 கிராம் 572 மி.கிராம் வெள்ளி, 1,175 கிலோ குட்கா, பொது விநியோகத் திட்ட அரிசி 5,700 கிலோ ஆகியவை இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள பணம், இதரப் பொருள்களின் மதிப்பு சுமார் 11 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 62 ரூபாய் ஆகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'தமிழ்நாடு ஓர் ஊழல் காடு' - பழ கருப்பையா