சென்னை: சாலை விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போக்குவரத்து காவல் துறையினர் சென்னையில் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் 15 நாட்களில் மட்டும் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் பலியாகி உள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாத 18 பின் இருக்கைப் பயணிகள் எனத் தெரியவந்தது.
இதனால் உயிரிழப்புகளைத் தடுக்க இருசக்கர வாகனங்களில் பின் இருக்கைப் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும்; இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை தெரிவித்திருந்தது. அந்த வகையில் இந்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
ரூ.100 அபராதம்: குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகன பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் பயணிகளிடம் 100 ரூபாய் அபராதத் தொகையினை வசூல் செய்து வருகின்றனர்.
மேலும் ஹெல்மெட்டில் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடமும், ஐ.எஸ்.ஐ முத்திரை பெறாத ஹெல்மெட் அணிந்து செல்லும் வாகனஓட்டிகளிடமும் அபராதத் தொகையைப் பெற்று வருவதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் இதுவரை ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பின் இருக்கைப் பயணிகள் மீது 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அபராதத்தொகை வசூல் செய்து வருவதால் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை அடுத்த மூன்று நாட்கள் நடைபெறும் எனவும்; தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், கோயில், மளிகைக்கடை போன்ற பல இடங்களுக்கு அவசரமாக செல்வதால் ஹெல்மெட் அணிவதில் சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலைய மரணம் இனி இருக்கக்கூடாது - டிஜிபி சைலேந்திர பாபு