சென்னை: அடுத்தாண்டு ஆசிரியர் வாரியம் நடத்தவுள்ள தேர்வு குறித்து, வெளியிடப்பட்டுள்ள ஆண்டு திட்டப்பட்டியலின் படி, 2023 ஏப்ரல் மாதம் அரசு கலை அறிவியல் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 6,553 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என்றும்; 3,557 பணிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் எனவும், முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 2023இல் நடைபெறும் என்றும் ஆண்டு திட்டப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெறும் என்றும்; அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் எனவும், வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான தேர்வு மே 2023ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்முறையாக வேலைவாய்ப்பு பெறுவதற்கான இரண்டாவது தகுதித் தேர்வு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் அரசாணை 149 மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றுமொரு தேர்வினை எழுத வேண்டுமென உத்தரவிட்டது.
இத்தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஆனால் 2ஆவது தேர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படாமல், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவதாக மற்றும் முறை தேர்வு எழுதக்கூடிய 149 அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆசிரியர்கள் இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இரண்டாவதாக நடக்கும் இந்த தேர்வில் பங்கேற்க முடியும்.
இதையும் படிங்க: மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்?