சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் சீனா, ஹாங்காங், தென்கொரியா, ஈரான், இத்தாலி, குவைத், பக்ரைன், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் சென்னை விமான நிலையத்தை நம்பியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தினமும் வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாக சென்னை விமான நிலையம் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகி உள்ளன. இதனால் பயணிகள் வருகை குறைந்து விமான நிலையமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சென்னை விமான நிலையத்திலேயே முடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பு ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்டிய நிலையில் தற்போது 200 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே வருமானமாக கிடைக்கின்றது. இதனால் தினசரி தேவைக்கே வழியில்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரியளவு ஏற்படாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் பயணிகள் அனைவரும் விமான சேவையை பயன்படுத்தி விமான நிலைய கால் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பழைய நிலைமைக்குத் திரும்பவேண்டும் என்று கூறுகின்றனர்.