இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2374.74 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ் தமிழ்நாடு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் 'வீட்டுக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம்' குறித்த மாவட்ட அளவிலான 'பேக்கேஜ் டெண்டரை' முறைகேடுகள் செய்வதற்காகப் பாதுகாத்திட; ஊராட்சி மன்றத் தலைவர்களை அதிமுக அரசு மிரட்டுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 'ஜே.ஜே.எம்.' திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் 497 ஊராட்சிகளில், 148 ஊராட்சிகளுக்கு விடப்பட்ட 'பேக்கேஜ் டெண்டரை' எதிர்த்தும், ஊராட்சி மன்றங்களுக்கே நிதியையும், ஜே.ஜே.எம். பணிகளையும் நேரடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு விசாரணைக்காக, “ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டம் குறித்த கிராமச் செயல்திட்டம் மற்றும் தீர்மானங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் உடனடியாக முன்தேதியிட்டுப் பெற வேண்டும்” என்று மிரட்டல் விடுத்து, மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு எல்லாம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவரே அனுப்பியுள்ள 'ஆடியோ எச்சரிக்கை' அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே இப்போதும் கூட காலம் கழிந்து விடவில்லை. ஜே.ஜே.எம். குடிநீர்த் திட்டப் பணிகளுக்கான நிதிகளை நேரடியாக உள்ளாட்சி மன்றங்களுக்கே அளித்து - மாவட்ட அளவில் விடப்பட்டுள்ள 'பேக்கேஜ் டெண்டர்' முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.