கரோனா தொற்றுக்கு எதிராக போராடிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் இது குறித்து கூறுகையில், "மருத்துவத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள், பிற முன்களப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களின் தியாகம் புரியாமல் அசாம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மருத்துவர்கள் தாக்கப்படுகின்றனர்.
2008ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, மருத்துவத்துறையினருக்கு எதிரான வன்முறை, பொருள் சேத இழப்பு ஆகியவற்றை தடுக்க அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் சுகாதாரத்துறையினரை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சட்டத்தைப்போல் இந்திய அரசும் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் ஜூன் 18ஆம் தேதி தேசிய எதிர்ப்பு தினமாக 'காப்போரை காப்பீர்' என அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்களை தாக்குபவர்களை விரைவாகவும், கடுமையாகவும் தண்டிக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் நடைபெறும்போது, எந்த விதமான மருத்துவச் சேவையும் நிறுத்தப்படாது. கரோனா வழிகாட்டுதலின்படி இடைவிடாத மருத்துவப் பணிகள் நடைபெறும்.
மருத்துவர்களும், பணியாளர்களும் கருப்புப் பட்டை அணிந்தும், மருத்துவமனை, கிளினிக் வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள், குறிப்பு அட்டைகள் வைத்து போராட்டம் நடத்த வேண்டும்.
மேலும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து மனு அளிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'கரோனா பாதிப்பைவிட குணமடைந்தோர் விகிதம் 2 மடங்காக உள்ளது' - மா. சுப்பிரமணியன்