பேக் செய்யப்பட்ட உணவுப் பொருள்களில் பாக்டீரியாக்கள் உருவாவதும், அந்த ரேப்பர்களை குப்பையில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதும் நீண்ட நாள் பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்த நீண்ட காலப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் புதிதாக பாக்டீரியா எதிர்ப்பு உணவு ரேப்பரைக் கண்டறிந்துள்ளனர். இந்த ரேப்பர்கள் முற்றிலும் பாதுகாப்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி மெட்ராஸ் குழுவின் இந்தப் புதிய திட்டத்திற்காக சமீபத்தில் ’2020 - சிட்டாரே - காந்தியன்’ இளம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை (ஜி.ஐ.டி.ஐ) பாராட்டும் நிகழ்ச்சியில் விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் இந்தியக் காப்புரிமைக்காகவும் ஆராய்ச்சியாளர்கள் தாக்கல் செய்துள்ளனர். ஐ.ஐ.டி மெட்ராஸின் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் முகேஷ் டோபிள், ஆராய்ச்சி அறிஞர் திருமதி பூஜா குமாரி ஆகியோர் இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கழிவு மேலாண்மை நிபுணர்களின் கூற்றுப்படி, அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளிலும் ஒன்பது சதவிகிதம் பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது, சுமார் 12 சதவிகிதம் எரிக்கப்படுகிறது. மேலும், அசுத்தமான உணவை சாப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் 4,20,000 பேர் உயிரிழக்கின்றனர். இவற்றுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு உள்ளது.
இது குறித்து பேராசிரியர் முகேஷ் டோபிள் கூறுகையில், "பாக்டீரியா வளர்ச்சியின் காரணமாக சேமிப்பின்போது திடக்கழிவு மற்றும் உணவு மாசுபாடு ஆகிய இரண்டு முக்கியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு உணவு ரேப்பரை வடிவமைப்பதே எங்கள் யோசனை. தற்போது, இந்த பாக்டீரியா எதிர்ப்பு உணவு ரேப்பரை தயாரித்துவிட்டோம். இந்தத் தயாரிப்பு, நுகர்வதற்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இது அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தாது" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "நாங்கள் உருவாக்கிய இந்த ரேப்பர் பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளிலும் 21 நாள்களில், நான்கு முதல் 98 சதவீதம் வரை சீரழிவு விகிதத்தை குறைக்கிறது. இந்த ரேப்பர், சூழல் நட்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது ஸ்டார்ச், பாலிவினைல் ஆல்கஹால், சைக்ளிக் பீட்டா கிளைக்கான்கள் (சிபிஜி) கொண்ட பாலிமெரிக் கலப்புகளால் செய்யப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உலக மூட்டு அழற்சி தினம் கடைபிடிப்பு