சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியில் தைப் பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அந்த போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் ஊடகங்களிடையே பேசிய அவர், “சென்னை காவல்துறை பொதுமக்களோடு இணைந்து தைப் பொங்கல் விழாவை நடத்தினோம். காவல்துறை சார்பாக இந்த பகுதியில் நூலகம் கட்ட இருக்கிறோம். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காணும் பொங்கல் நாளன்று பொதுமக்கள் பொது இடங்களில் கூடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். 2021 ஆங்கில புத்தாண்டின்போது, பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தது போல காணும் பொங்கலின் போதும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவின்படி, திரையரங்குகள் 50% இருக்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், திரையரங்குகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். யூ -டியூப் சேனல் வைத்திருப்பவர்கள் ஆபாசமாகப் பேட்டி எடுத்து வெளியிட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களின் மூலமாக கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்!