சென்னை: சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர் பேசுகையில்,
"தமிழ்நாட்டில் மொத்தமாக மூன்று கோடியே 59 லட்சத்து 31 ஆயிரத்து 677 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி 44 விழுக்காட்டினருக்கும், இரண்டாவது தவணை 15 விழுக்காட்டினருக்கும் போடப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைக்கு 22 லட்சத்து 16 ஆயிரத்து 160 தடுப்பூசிகள் வந்ததில் தமிழ்நாடு அரசு அளித்த அழுத்தம் காரணமாக இதுவரை தனியார் மருத்துவமனைகள் மூலம் பெறப்பட்ட அனைத்துத் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வருகின்ற 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டுள்ளதால் மாநிலத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம்.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கரோனா தொற்று உறுதியாகும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பள்ளிகளில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 15 நாள்களுக்கு ஒருமுறை கரோனா சோதனை - ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு