சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியின் (தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம்) 225ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அவரின் மனைவி சுஜாதா ஆகியோர் பங்கேற்று வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் அவர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
எனக்கு அரசு தரப்பில் எந்தவித அழுத்தமும் வரவில்லை. கல்லூரியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளும், நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பும் அரசிடம் இருந்து கிடைத்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் ஆறு பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.
மாணவர்கள் தங்கள் படிப்பின் மீது அக்கறை கொண்டு படித்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால், அதன் மீது சமூகத்தில் அது எதிர்மறை கருத்துகளை உருவாக்கும். இதனால் அந்தக் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடவில்லை. அண்ணா பல்கலைக்கழகம் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் விளங்குவதுபோல் இந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
முன்னதாக, உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிடும்படி துணைவேந்தருக்கு தனியார் கல்லூரிகள் இயக்கம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.