சென்னை: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயார் செய்த பொதுப் பாடத்திட்டத்திற்கு பல்வேறுத் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பொதுப்பாடத்திட்டத்தை தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு அமல்படுத்துவது குறித்தும், மாதிரிப் பாடத்திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மாதிரி பாடத் திட்டம் குறித்து அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "சட்டமன்றத்தில் அறிவித்தபடி பாடத் திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமை இதனால் பறிக்கப்படாது. மாதிரி பாடத்திட்டம் மறு சீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப்பெற்றும் பணியில் சேர
முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
மாதிரி பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு துணைவேந்தர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தன்னாட்சிக் கல்லூரிகளில் 90 சதவீதம் அமல்படுத்தி உள்ளனர். மீதமுள்ளவர்கள் அமல்படுத்த வேண்டும். இன்றைய கூட்டத்தில் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு கல்லூரியில் பாடத்திட்டம் வேறுபடுகிறது. அதனை மாற்றி ஒரே மாதிரியான பாடத்திட்டத்தினால், ஒரு பகுதியில் படிக்கும் மாணவர்கள் வேறு பகுதியில் உள்ள கல்லூரியில் சென்று படிக்க முடியும். தேசியக் கல்விக் காெள்கையை எதிர்க்கிறோம்.
பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். 900 கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவையிலும் பேசி உள்ளேன். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளேன். பட்டமளிப்பு விழா நடத்த அரசு தயாராக உள்ளது. மாதிரிப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் உயர்கல்வி மன்றத்திற்கு உள்ளது. அதன் சட்ட விதிகளின்படி தான் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றி தப்பிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த போலீஸ்