சென்னை கோட்டூர்புரம் மேற்கு கால்வாய் சாலை பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி பானுப்பிரியா (21). இருவரும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். டேனியல் ராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் டேனியல் ராஜ் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவி பானுப்பிரியாவிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) டேனியல் ராஜூக்கும் பானுப்பிரியாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பானுப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பானுப்பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த டேனியல் ராஜை கோட்டூர்புரம் காவல் துறையினர் இன்று (ஆகஸ்ட் 4) கைது செய்தனர். மேலும், அவர் மீது பிரவு 498 (கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரால் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்), பிரிவு 304 (வரதட்சணை கொடுமையால் மரணத்தை விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறையினர் டேனியல் ராஜை சைதாப்பேட்டை குற்றவியல் 18ஆவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.