சென்னை ஆவடி அருகே கோவர்த்தனகிரி பகுதியில் பழமைவாய்ந்த கங்கை அம்மன் கோயில் உள்ளது. ஊரடங்கால் இந்தக் கோயில் பல நாள்களாக மூடியுள்ளது. இதை பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், கோயில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின், இதனைக் கண்ட கோயில் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர்.
அதில், அடையாளம் தெரியாத ஒருவர் நேற்று (மே 14) அதிகாலை கோயிலுக்குள் இரும்பு கம்பியுடன் நுழைகிறார். கோயிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் அங்குள்ள உண்டியலை உடைக்க பல மணிநேரம் போராடுகிறார்.
ஆனால், இரும்பு கம்பியை உண்டியலின் பூட்டில் நுழைத்து சுற்றி சுற்றி வலம்வந்தும் உடைக்க முடியவில்லை. பின்னர், கீழே உட்கார்ந்தும், படுத்தும் அந்த பூட்டை உடைக்க படாத பாடுபடுகிறார்.
பின்னர், பூட்டுடன் போராடிய திருடன் ஒருவழியாக பூட்டை உடைக்கிறார். பணம் கொட்டும் என எண்ணிய திருடனுக்கு தேள் கொட்டியது போல அதிர்ச்சியடைந்து உட்காருகிறார்.
ஊரடங்கின் காரணமாக மக்கள் யாரும் கோயிலுக்கு வராததால் உண்டியலில் பணம் ஏதுமின்றி வெறும் நூறு ரூபாய் சில்லைரைகளே இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், அந்த சில்லரைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை வைத்து திருடனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கல்யாணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!