சென்னை: தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் மதவெறி சக்திகள் திட்டமிட்டு கலவரத்தை தூண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் இணைந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அக்டோபர் 2ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று கூறினார். பின்னர் பேசிய முத்தரசன், "இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதிப்பூங்காவாக திகழ்கின்ற மாநிலம். அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் தங்களுடைய அரசியல் சுய லாபத்திற்காக ஆ. ராசா பேசியதை திரித்துப் பேசி வருகிறார்கள். ஆ. ராசா தவறான கருத்துக்களை சொல்லவில்லை.
ஏற்கனவே அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் பேசிய கருத்துகளை தான் பேசினார். ஆனால் இந்துக்களுக்கு எதிராக பேசினார் என்று தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கடந்த காலத்தில் இது போன்று நடந்த சம்பவங்களை பாஜக நிர்வாகிகளே தங்களது விளம்பரத்திற்காக அவர்களே பெட்ரோல் குண்டுகளை வீசிக்கொண்டு பின்னர் விசாரணையில் தெரியவந்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே இந்த சம்பவங்களை செய்தவர்கள் யார் என்பதை வெளிக்கொண்டு வரவேண்டும். கட்சி வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கலியில் கலந்து கொள்ள வேண்டும். பாஜக சட்டத்தை மதிக்காது ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. பாஜக ஒரு பாசிச சக்தி என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், "அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளனர். பாஜக ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அவர்கள் பேரணி முன்னெடுப்பதில் ஆட்சேபனை இல்லை. காந்தியடிகளை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சே, எனவே காந்தியடிகள் பிறந்த நாளில் பேரணியை முன்னெடுப்பது உள்நோக்கம் கொண்டது. தமிழக சமூக நல்லிணக்கத்திற்கான மாநிலம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது வட இந்திய மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்த போது கூட தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. சமூக நல்லிணக்க பேரணியை விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது இந்நிலையில் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளை இணைத்து சமூக நல்லிணக்கம் மனித சங்கிலியாக நடத்த முடிவெடுத்துள்ளோம். அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இணைந்து மதவெறி சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க சமூக அமைதியை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அண்ணா சிலையை அவமதிப்பு செய்து அரசியல் ஆதாயத்தை தேடுகின்றனர்.
இது போன்ற அவமதிப்பு செயல்கள் அம்பேத்கர் சிலைக்கு நடந்திருக்கிறது. ஆனால் அண்ணா சிலைக்கு தமிழ்நாட்டில் இதுவரை நிகழ்ந்ததில்லை. சங்பரிவாரிகளின் இது போன்ற நச்சு செயல்களை தடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறைகளை தூண்டி பதட்டமான சூழ்நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சங்பரிவாரின் திட்டங்களில் ஒன்று.
2024 நாடாளுமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டே இத்தகைய சூழ்நிலைகளை அவர்கள் கையாண்டு வருகின்றனர். சாதாரண இந்துக்களின் மத நம்பிக்கையை நாங்கள் கொச்சைப்படுத்தவில்லை. சாதாரண இந்துக்களின் நம்பிக்கையை சங்பரிவார் குழு தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்களுக்கு அம்பலப்படுத்துகிறோம்" என கூறினார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க கோரிக்கை - உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு