சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சேர்ந்ததன் அடிப்படையில் கட்ஆப் மதிப்பெண்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையிலும், தேர்வு முடிவுகளின் தரவரிசை வெளியிடப்பட்ட பின்னர், அதனையும் ஒப்பிட்டு சிறந்த கல்லூரியினை தேர்வு செய்வது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்குகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது எந்த கட்ஆப் மதிப்பெண் பெற்றால் எந்தக்கல்லூரியில் இடம் கிடைத்தது விவரத்தை https://www.annauniv.edu/nwsnew/ என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதனை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதனால் மாணவர்கள் அதிக கட்ஆப் மதிப்பெண்கள் படி நடப்பாண்டில் தங்களுக்கு எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 481 பொறியியல் கல்லூரிகளுக்கான கட்ஆப் மதிப்பெண்களில், முதலிடத்தில் கிண்டி பொறியியல் கல்லூரியும், 2 ஆம் இடத்தில் எம்ஐடி பொறியியல் கல்லூரியும், அரியலூரில் உள்ள KKC பொறியியல் கல்லூரி கட்ஆப் மதிப்பெண் தரவரிசையில் கடைசி இடத்திலும் உள்ளது.
இந்த கட்ஆப் மதிப்பெண்களின் படி முதல் 100 கல்லூரிகளில் கட்ஆப் மதிப்பெண் சராசரியாக 150 என இருக்கிறது. இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, “தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் விரும்பும் கல்லூரியை பதிவு செய்வதற்கு பயனுள்ளதாக அமையும். விரும்பும் கல்லூரியை சரியான விவரங்களின் அடிப்படையில் தான் முன்னுரிமை அளித்து பதிவு செய்ய முடியும்.
இதேபோல் கல்லூரிகளின் தேர்வின் தேர்ச்சி விகிதத்தையும் அளிப்பார்கள். அதனையும் பார்க்க வேண்டும். சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதற்கு, தொடர்ந்து எந்த கல்லூரியில் கட்ஆப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். முதலில் உள்ள 65 கல்லூரிகள் தொடர்ந்து கட்ஆப் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசு சார்ந்த கல்லூரியை பார்த்து தெரிந்து கொண்டு, படிக்கும் மாணவர்களை சந்தித்து, கல்லூரியில் உள்ள வசதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
தொழில்நுட்ப கல்வி இயக்கம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை அளித்து வருகின்றது. தனியார் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறாதா? என்பதையும் பார்க்க வேண்டும்.
வேலை வாய்ப்பு வழங்கிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். விரும்பும் கல்லூரியை பதிவு செய்தப்பின்னர் , இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் எதுவும் செய்ய முடியாது. பொறியியல் கல்லூரிகளில் விரும்பும் கல்லூரியின் பட்டியல் மற்றும் பாடப்பிரிவுகளை குறித்து வைத்துக் கொண்டு அதன் பின்னர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதியிடம் துண்டுச் சீட்டு - வந்தது கலை, அறிவியல் கல்லூரி...அன்பில் பெருமிதம்..