சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில், மாநில தலைநகர் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லவும், முடிந்த வரையில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும் போக்குவரத்துத் துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி, சென்னையில் 5 இடங்களில் இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்து, தினசரி பேருந்துகள், முன்பதிவு பேருந்துகள், முன்பதிவில்லா பேருந்துகள் என இயக்கப்பட்டன. மாதவரம், கேகே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யபட்டது.
இதில் கடந்த நவம்பர் 9 முதல் 11ஆம் தேதி வரை தலைநகரிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்லவும், நாளை (நவ.13) முதல் வருகிற 15ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்குத் திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை; வேலூரில் விபத்து ஏற்படாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு!
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளும், 1,814 சிறப்பு பேருந்துகளும் என (09.11.2023 முதல் 11.11.2023 வரை) நேற்று நள்ளிரவு 12.00 மணி வரையில் மொத்தம் 10,570 பேருந்துகளில், 5 லட்சத்து 66 ஆயிரத்து 212 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும், இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 750 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய 2 லட்சத்து 38 ஆயிரத்து 598 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்ய, அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் குறைதீர் மையங்களும், கட்டுபாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பா?