மருத்துவர்களுக்குப் பரிசு வழங்கியது உள்ளிட்ட விற்பனை மேம்பாட்டுச் செலவினங்களை தங்கள் வருமானத்தில் இருந்து தள்ளுபடி செய்யக் கோரி, தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மருந்து நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு தங்க நகை, ரொக்கப்பணம், கிரெடிட் கார்டு, இன்பச்சுற்றுலா மட்டுமல்லாமல், இளம்பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்சமாக வழங்கி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாகவும், இது இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளை மீறிய செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
திரைமறைவில் நடக்கும் இந்த மருத்துவ மாஃபியாவால் பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், கடந்த 5 ஆண்டுகளில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து தங்க நகை, கிரெடிட் கார்டு, ரொக்கப்பணத்தை லஞ்சம் பெற்றதாக, எத்தனை மருத்துவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? தொழில் நடத்தை விதிகளை மீறி லஞ்சம் பெற்ற டாக்டர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மருத்துவ விதிகளை மீறி லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி,
இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர், மருந்து பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தலைமறைவு