சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் காயத்திரி. இன்று காலை இவர், தனது தோழியை கோடம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அவரை அங்கு விட்ட பிறகு வீடு திரும்பிய காயத்திரி, தனது செல்ஃபோனை தேடிய போதுதான் தெரிந்தது, வழியில் ஹேண்ட் பேக்குடன் செல்ஃபோன் தவறியிருப்பது. அதிர்ச்சியடைந்த காயத்திரி, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், ஹேண்ட் பேக்கில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன், ரூ.30 ஆயிரம் ரொக்கம், டெபிட் கார்டு உள்ளிட்டவை வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த புஷ்பா என்பவர் கோடம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனக்கு இந்த பேக் சாலையில் கிடைத்தாகக் கூறி ஒப்படைத்தார்.
பின்னர், காவல்துறையினர் பேக்கை சோதனையிட்டதில், அது காயத்திரியினுடையது என்பது தெரியவந்தது.
உடனே காயத்திரியை வரவழைத்து ஹேண்ட் பேக்கை , காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
விலை உயர்ந்த ஹேண்ட் பேக் கீழே கிடந்திருந்தும், பெருந்தன்மையாக அதனை காவல்துறையில் ஒப்படைத்த புஷ்பாவை காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: