ரக்ஷா பந்தன்: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன், முதலில் வட இந்திய பகுதிகளில்தான் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது தென் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும். உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர சகோதரிகளிடையே பாச பிணைப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
சகோதரத்துவம்: இந்த தினத்தில், பெண்கள் யாரை தனது சகோதரர்களாக கருதுகிறார்களோ, அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது முக்கிய நிகழ்ச்சியாகும்.இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த சகோதரிக்கு ஒரு பரிசோ அல்லது பணமோ அளிப்பது வழக்கம். இப்பண்டிகை முதலில் இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக கருதப்பட்டாலும், காலப்போக்கில் இது சமுதாய பண்டிகையாக பார்க்கப்பட்டது.
கிருஷ்ணரும் திரௌபதியும்: ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கு, புராணங்களின்படி ஒரு வரலாறு உண்டு. அதாவது, மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தில் வடிந்த ரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து அவரின் மணிக்கட்டில் கட்டினார்.
இது கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.
அதன்படி திரௌபதியை காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று, திரௌபதியை துகிலுரிய முயன்றபோது, அவரை கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கர்ணாவதி அனுப்பிய நூல்: இதற்கு மற்றுமொரு கதையும் உண்டு. ’ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தூர் நாட்டை ஆண்டு வந்தவர் கர்ணாவதி என்ற ராணி. சித்தூர் நாட்டைக் கைப்பற்றும் விதமாக குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் மீது போர் தொடுத்தார்.
இதை அறிந்துகொண்ட கர்ணாவதி, முகலாய பேரரசர் ஹுமாயுனுக்கு ‘ராக்கி’ எனும் புனித நூலை அனுப்பி தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.இதனால் பாச உணர்வு கொண்ட ஹுமாயுன், கர்ணாவதி ராஜ்ஜியத்தைக் காக்க முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று, பகதூர் ஷா வெற்றிக்கொடி நாட்டினார்.
போரஸ் மன்னரின் சகோதர உணர்வு: கிமு 326ல் மாவீரர் அலெக்சாண்டர் இந்தியாவில் படையெடுத்து ஏறக்குறைய வடக்கு பகுதி அனைத்தையும் கைப்பற்றிய பின்னர் போரஸ் மன்னரிடம் போரிட்டார்.
போரஸ் மன்னரின் வலிமையை கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி ரோக்ஷனா போரில் தன் கணவரின் உயிருக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று அவருக்கு ஒரு புனித நூலை அனுப்பினார். போரில் அலெக்சாண்டரை நேரடியாக வீழ்த்த வாய்ப்பு கிடைத்தும் கையில் கட்டியிருந்த புனித நூலைப் பார்த்ததும் அலெக்சாண்டரை விட்டுவிட்டார்.
இதுபோல் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுவதற்கு, பல கதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தற்போது இவை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறப்பட்டுள்ளது. மேலும் இவை அண்ணன் தங்கை இடையே உள்ள இரு அருமையான உறவின் போற்றுதலாக பார்க்கப்படுகிறது.
அண்ணன் தங்கை பாசம்: பொதுவாக பெண்கள் தனது தந்தையின் ஸ்தானத்தை, எளிதாக யாருக்கும் தருவதில்லை. ஆனால் அதனை எளிதில் தட்டிச் செல்லும் ஒரே உறவு சகோதரன் தான். ஏனென்றால், தங்கையை தாயாகவும், மகளாகவும் பார்க்கும் குணம் அவனிடம் மட்டுமே உள்ளது.
என்னதான் சண்டை, தொல்லை, கேளிக்கை என அனைத்து விதமான செயல்களிலும் ஈடுபட்டாலும், தங்கை என்ற உறவுக்காக, அனைத்தையும் விட்டுக்கொடுப்பவன் அவன். இதற்கு தொப்புள் கொடி உறவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ராவணன் என்ற பேரரசன்: இதிகாச புராணமான இராமாயணம் உருவானதும்கூட தங்கைப் பாசத்தால் நிகழ்ந்த சம்பவம்தான். தனது தங்கை சூர்ப்பனகையை இழிவுபடுத்திய காரணத்திற்காக, ராவணன் என்ற தமிழ்ப்பேரரசன் தனது சாம்ராஜ்ஜியத்தையே இழந்துவிடுவதாகப் புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட உறவுதான் இந்த தங்கை என்ற உறவு.
எத்தனை மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் தங்கைக்கான இடத்தை அண்ணனும், அண்ணனுக்கான இடத்தை தங்கையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை.
இதையும் படிங்க: மைசூரு தசரா கொண்டாட்டம் - யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!