சென்னை: அரசு கேபிளில் மாலைமுரசு தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யபட்டதற்கு கண்டனம் தெரிவித்து மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நேற்றைய தினம் மாலைமுரசு தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யபட்டதற்கு கட்சித் தலைவர்கள், பத்திரிகை அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கபட்டது. இதற்கு முன் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றபோது, சம்பந்தபட்ட அமைச்சர்களை அணுகி அதற்கான தீர்வு காண்பர். ஆனால் மாலைமுரசு தொலைக்காட்சி, இருட்டடிப்பு செய்யபட்டதற்கு அந்நிர்வாகம் மறைமுகமாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளாமல், தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி தீர்வு கண்டுள்ளது. அதற்கு என்னுடைய பாராட்டுகள்.
தேர்தல் நடைபெறுவதற்கு சில காலமே உள்ள நிலையில் இது போன்ற செயல்கள் அருவருக்கத்தக்கது. இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது. இந்தியாவில் உள்ள தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில்தான் அமைதியான முறையிலும் ஒழுக்கமாகவும் கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. எனவே இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்.
தந்தி, புதிய தலைமுறை போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் அரசியல் தலையீடு உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாம் கருத்தரங்கு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும், இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தக் கருத்துக்கணிப்பு ஒளிபரப்பானதில் இருந்து அரசு கேபிள் ஒளிபரப்பில் மாலைமுரசு தொலைக்காட்சியின் ஒளி மற்றும் ஒலியின் தரத்தைக் குறைத்து இருட்டடிப்பு செய்யும் வேலையை தமிழ்நாடு அரசின் அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிரட்டல் விடுக்கும் இந்த சட்டவிரோத ஜனநாயக விரோதச் செயலின் பின்னணியில் செய்தித் துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத அத்துமீறல்களில் ஈடுபட்டு ஊடகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்க்காமல் மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் இது தொடர்பாக அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, உடனடியாக அரசு கேபிளில் முழு தரத்துடன் மாலைமுரசு தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்திட வேண்டும். ஊடகக் குரலை நெரிக்க முனைந்த அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.