கோவை மாநகராட்சி சிவானந்தா காலனியில் வரும் 25ஆம் தேதி அகில பாரத இந்து மகாசபை சார்பில் அரசியல் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசியத் தலைவர் சக்கரபாணி மகாராஜ், தேசிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கோரி ரத்னபுரி காவல் நிலையத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீது எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை எனக்கூறி, அகில பாரத இந்து மகாசபையின் இளைஞர் அணித் தலைவர் சுபாஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஒலிபெருக்கி அனுமதி பெற்று கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பம் மீது காவல் துறையினர் இன்னும் முடிவெடுக்காததால், மனுவை ஏற்றுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து வரும் 23ஆம் தேதிக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.