இது தொடர்பாக அவர் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரிய தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “சென்னை சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் நவம்பர் 2019ஆம் ஆண்டிலிருந்து உதவி ஆணையராகப் பணிபுரிந்துவருகிறேன்.
இங்குள்ள இந்தி பிரிவின் பணி என்பது மத்திய அலுவல் மொழியாக இந்தியைப் பரப்புவதும் அதன் உபயோகத்தைக் கண்காணிப்பதும் ஆகும். இந்தப் பணியில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.
உதவி ஆணையரான நானும், கண்காணிப்பாளரான சுகுமார் என்பவரும் தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆய்வாளர், எழுத்தர் ஆகியோர் வடநாட்டைச் சேர்ந்த இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
இந்தி பிரிவில் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு, கடிதங்களும் இந்தியில் இருக்க வேண்டும் என்பது சட்ட விதி. அதில் குறைந்தபட்சம் 50 விழுக்காடாவது இந்தியை உபயோகப்படுத்த வேண்டும். எனக்கும், கண்காணிப்பாளருக்கும் இந்தி எழுதப் படிக்கத் தெரியாததால் கோப்புகளில் எழுதப்படும் குறிப்பு, கடிதங்களை ஆய்வாளர் அல்லது எழுத்தர் இந்தி மொழிக்கு மாற்றுவர் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நாங்கள் கையெழுத்திடுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் இருக்கும்போது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஆய்வாளராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்தி தெரிந்த உதவி ஆணையர் பணியில் இருக்கும்போது அவருக்கு ஒதுக்காமல் எனக்குத் திட்டமிட்டு இந்தப் பணியை ஒதுக்கி உள்ளனர். இது என்னுடைய தமிழ் உணர்வை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செய்துள்ளனர்.
இந்தி தெரியாத, இந்தி பிரிவில் வேலைசெய்வதற்கு விருப்பமில்லாத என்னிடத்தில் அந்தப் பணியை கொடுப்பது என்பது என் மீது இந்தி மொழியை திணிப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.
இந்தியை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மட்டும் இந்தித் திணிப்பாக இருக்காது, இந்தியைப் பரப்ப வேண்டும் என்று விருப்பம் இல்லாத ஒருவரை நிர்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே.
எனவே, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள இந்தி பிரிவிற்கு இந்தி எழுத படிக்கத் தெரிந்தவர்கள், அந்தப் பிரிவில் வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.