சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் உடன் அனுமதி அளித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க முயற்சிக்கிறது. ஆகவே மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாத போது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். தேவைப்பட்டால், அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள் என்று திருமாவளவன் தரப்புக்கு அறிவுறுத்தினார்.
தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டுகளை வீசும் தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்