அஞ்சல் துறையில் ஊரக அஞ்சல்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. கேள்விகள் அனைத்தும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதை எதிர்த்து திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதிட்டதாவது:
- அஞ்சல் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்காதது சட்ட விரோதமானது.
- இந்தி மொழி தாய்மொழியாக அல்லாத மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வரும்காலங்களில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- மத்திய அரசு தரப்பில், அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருங்காலங்களில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.
மேலும் அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது, தமிழ் மொழி தேர்வு மொழியாக இருக்கும் என அமைச்சரின் உத்தரவாதத்தையும் எழுத்துப்பூர்வ ஆவணமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.